சினிமா செய்திகள்
சவாலான காலங்களில் உதவியை நாடுங்கள்.. - இளைய தலைமுறையினருக்கு யுவன் சங்கர் ராஜா அறிவுறுத்தல்
சினிமா செய்திகள்

'சவாலான காலங்களில் உதவியை நாடுங்கள்..' - இளைய தலைமுறையினருக்கு யுவன் சங்கர் ராஜா அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
21 Sept 2023 5:35 AM IST

கஷ்டத்தை ஒப்புக்கொண்டு, அதில் இருந்து மீள்வதற்கு ஆதரவை தேட வேண்டும் என யுவன் சங்கர் ராஜா அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் மீரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு நடிகர்கள், நடிகர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள இரக்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;-

"விஜய் ஆண்டனியின் இழப்பை நினைத்து வருந்துகிறேன். ஒரு தந்தையாக, விஜய் ஆண்டனி இப்போது என்ன வேதனையை அனுபவித்திருப்பார் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இந்த தாங்க முடியாத இழப்பை தாங்கும் சக்தியை அந்த குடும்பத்திற்கு எல்லாம் வல்ல இறைவன் வழங்க பிரார்த்திக்கிறேன்.

நம் அன்றாட வாழ்க்கையிலும், நம் குடும்பம் மற்றும் நட்பு வட்டாரங்களிலும் நம்மைச் சுற்றியுள்ள பலர் அமைதியாக பல்வேறு மன மற்றும் உணர்ச்சி வேதனைகளை அனுபவிக்கிறார்கள். வாழ்க்கை ஒருவரை நம்பிக்கையற்ற பாதையில் தள்ளலாம். அந்த இருள் சூழ்ந்த தருணத்தில், அவர்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் அழகான எதிர்காலத்திற்குத் தகுதியானவர்கள் என்பதை மறந்துவிடுவார்கள்.

நமது வலிமை மற்றும் தைரியத்தை சோதிக்கும் இத்தகைய சவாலான காலங்களில் உதவியை நாடுமாறு மக்களை குறிப்பாக இளைய தலைமுறையினரை நான் கேட்டுக்கொள்கிறேன். கஷ்டத்தை ஒப்புக்கொண்டு, அதில் இருந்து மீள்வதற்கு ஒரு ஆதரவை தேடுவது மிகவும் துணிவான செயலாகும்.

சில மோசமான தருணங்களில் எனக்கான உத்வேகத்தை தேடுவதற்கு நான் சிரமப்பட்டுள்ளேன். ஆனால் நீங்கள் வெளிப்படையாக பேச முயன்றால், உங்களை கவனிப்பதற்கும், உங்களுக்கு உதவி செய்வதற்கும் பலர் தயாராக இருப்பார்கள்"

இவ்வாறு யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.


pic.twitter.com/I00e1pS4Lj

— Raja yuvan (@thisisysr) September 20, 2023 ">Also Read:


மேலும் செய்திகள்